A.R. Munsoor Foundation
Light for Learning | Formerly A.R. Munsoor Foundation Inc. Empowering underprivileged children through education, literacy and opportunity.
Supporting rural schools, women and communities across Sri Lanka. Education is a Right, Not a Privilege.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்களின் ஆடை உரிமை தொடர்பாக நாம் முன்னெடுத்த மனுவை (Petition) தங்களது வீடியோவில் இணைத்து, எமது குரலை சமூகத்திடம் கொண்டு சென்றமைக்கு CGC Talks Shop Media மற்றும் அதன் முகாமையாளர் சகோ ரினூஷா அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
குறிப்பாக, இந்த வைத்தியசாலையின் வரலாற்றுப் பின்னணி, கேட் முதலியார் எம். எஸ். காரியப்பர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகால பணிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைகள் மற்றும் அவருடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பு தொடர்பாகவும் மிகவும் தெளிவாக விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது உரிமைக்கான இந்தப் பயணத்தில் ஊடகங்களின் ஆதரவும் குரலும் மிகவும் முக்கியமானது.உண்மையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு குரலுக்கும் நன்றி..!!
✍️ கையொப்பமிடுங்கள்
🔗 https://c.org/NrN5zvk9jD
இலங்கையின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள், தங்களது பணியைத் தொடர்வதற்கான நிபந்தனையாக ஹிஜாபை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அறிந்ததைத் தொடர்ந்து, இந்த மனுவை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அரச சேவையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக தெளிவான, நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை வேண்டும் என்பதே இந்த மனுவின் நோக்கம்.
✍️ இம்மனுவில் பெறப்படும் கையொப்பங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, இலங்கை அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும், உரிய அரசாங்க திணைக்களங்களுக்கும் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ளன. முஸ்லிம் பெண்களின் மத உரிமை, கண்ணியம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தெளிவான மற்றும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தக்கூடிய கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே இம்மனுவின் முக்கிய நோக்கமாகும். எனவே, இந்த முக்கியமான முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் ஆதரவை வழங்கி, மனுவில் கையொப்பமிட்டு, உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினரிடமும் பகிர்ந்து,அதிகமான மக்களிடம் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
✍️ கையொப்பமிடுங்கள்
🔗 https://c.org/NrN5zvk9jD
ஒரு கையொப்பம் …சமத்துவத்திற்கும் உரிமைக்கும் ஒரு குரல்…!
17/08/2026
மதம் சார்ந்த ஆடை, மனித அடிப்படை உரிமை..! இது எமது உரிமைக்கான மனு..!!
இலங்கையின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள், தங்களது பணியைத் தொடர்வதற்கான நிபந்தனையாக ஹிஜாபை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அறிந்ததைத் தொடர்ந்து, இந்த மனுவை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அரச சேவையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக தெளிவான, நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை வேண்டும் என்பதே இந்த மனுவின் நோக்கம்.
இம்மனுவில் பெறப்படும் கையொப்பங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, இலங்கை அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும், உரிய அரசாங்க திணைக்களங்களுக்கும் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ளன. முஸ்லிம் பெண்களின் மத உரிமை, கண்ணியம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தெளிவான மற்றும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தக்கூடிய கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே இம்மனுவின் முக்கிய நோக்கமாகும். எனவே, இந்த முக்கியமான முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் ஆதரவை வழங்கி, மனுவில் கையொப்பமிட்டு, உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினரிடமும் பகிர்ந்து,அதிகமான மக்களிடம் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
✍️ கையொப்பமிடுங்கள்
🔗 https://c.org/NrN5zvk9jD
ஒரு கையொப்பம் …சமத்துவத்திற்கும் உரிமைக்கும் ஒரு குரல்…!
26/07/2026
#கல்முனையின்_அரசியல்_வரலாற்றில் #அழியாத_தடம்_பதித்த_
#மர்ஹூம்_ஏ_ஆர்_மன்சூர்.
முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு அவரை நன்றியுடனும் மரியாதையுடனும் நினைவுகூருகிறோம்.
கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், கப்பற்துறை, வர்த்தகம் மற்றும் வாணிப அமைச்சராகவும் தேசிய அரசியலில் உயர்ந்த பொறுப்புகளை வகித்த மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்கள், அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தனது பிறந்த மண்ணின் அபிவிருத்தியை மட்டுமே சிந்தித்துத் வாழ்ந்த அர்ப்பணிப்புமிக்க தலைவர்.
இன்று அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும், கல்முனை மக்களின் நினைவிலிருந்து அவர் மறையவில்லை. காரணம், அவர் வகித்த பதவிகள் அல்ல; மக்களுக்காக ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளே.
1933 ஜூலை 30 அன்று கல்முனையில் பிறந்த அவர், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை தாயகத்தில் கற்று, பின்னர் கொழும்பு செயின்ட் ஜோசப் கல்லூரியில் உயர்கல்வி பயின்றார். 1955ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து, 1958ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார்.
1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். பின்னர் 1979ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும், 1989 முதல் 1994 வரை தேசியப்பட்டியல் உறுப்பினராகவும், வர்த்தகம் மற்றும் வாணிப அமைச்சராகவும் பணியாற்றினார்.
அவரது 17 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் கல்முனை மட்டுமன்றி, கிழக்கு மாகாணம் மற்றும் முழு இலங்கைக்கும் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
கல்முனையின் வளர்ச்சிக்காக அவர் செய்த பணிகள் இன்றும் கண்கூடாகத் தெரிகின்றன. இன்று கல்முனையில் காணப்படும் பல அரசாங்கக் கட்டடங்கள் அவரது அமைச்சரவை காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்வி, போக்குவரத்து, வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் அரச சேவைகள் ஆகிய துறைகளில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயனளித்தன.
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை ரயில் பாதையை நீட்டிக்கும் தொலைநோக்கு திட்டத்திற்காக ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 1993ஆம் ஆண்டு தொழில்நுட்ப ஆய்வுகளும் திட்ட வரைவுகளும் தயாரிக்கப்பட வழிவகுத்தார். ஆட்சி மாற்றத்தால் அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனது கிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்.
கல்வித்துறையிலும் அவரது பங்களிப்பு அளப்பரியது. அட்டாளைச்சேனையில் தேசிய கல்விக் கல்லூரி உருவாக அடித்தளம் அமைத்ததுடன், பல பாடசாலைகள் தரமுயர்த்தப்படவும் புதிய கட்டடங்கள் அமைக்கப்படவும் முன்னின்றார்.
பின்னர் குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், குவைத் நிதி உதவியின் மூலம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கினார். அவரது சேவையைப் பாராட்டி 2016ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது.
அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், கல்முனை குளக்கட்டு வீதி உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து முயன்றார். அதிகாரம் இல்லாத நிலையிலும், மக்களின் நலனுக்காக அவர் காட்டிய அக்கறை உண்மையான மக்கள் தலைவரின் அடையாளமாகும்.
இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களுடனும் நல்லுறவை பேணி வாழ்ந்த அவர், தனது வாழ்நாளில் சமூக நல்லிணக்கத்திற்கும் பெரும் பங்களிப்பு செய்தார். அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் அனைத்து இன மக்களும் கலந்து கொண்டது, அவர் அனைவராலும் மதிக்கப்பட்ட தலைவர் என்பதற்கான மறுக்க முடியாத சான்றாகும்.
மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் கல்முனையின் அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்த தலைவர். ஆண்டுகள் பல கடந்தாலும், அவர் ஆற்றிய சேவைகள் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
வல்ல அல்லாஹ் அவர்களின் மக்கள் சேவைகளைப் பொருந்திக் கொண்டு, அனைத்து பாவங்களையும் மன்னித்து, நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை அருள்வானாக. ஆமீன்.
- Mohammet shm Fows
26/07/2026
25/07/2026
இறைவனின் அழைப்பை ஏற்று நீங்கள் சென்று ஒன்பது வருடங்கள் கடந்து விட்டது. ஆனால். ஒரு நொடி கூட உங்கள் நினைவின்றி எங்களுக்கு கடந்து செல்வதில்லை.
எங்கள் பேச்சில். மூச்சில், நினைவில் . . . என்றும் எப்போதும் . . நீங்களே . . நீங்களாகவே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்ளட்டும்! உங்கள் நன்மைகளை ஏற்று உங்களுக்காக கையேந்தும் துஆக்களை அங்கிகரித்து,
ஜன்னத்துல் பிர்தவ்ஸில் மேலான சுவர்க்கவாதியாக உங்களை நுழையச் செய்யட்டும்! ஆமீன் 🤲
மறுமையில் உங்களை சந்திக்கும் வரை . .
உங்கள் அன்பு மகள்
மர்யம் 😥❤️
25/07/2026
🔴Live : வியூகம் விசேட நேரலை 🟣
முன்னாள் அமைச்சர் மர்ஹும் AR.மன்சூர் அவர்களின் 9வது நினைவேந்தல் மற்றும் குர்ஆன் தமாம் நிகழ்வு!🤲
இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் AR.மன்சூர் அவர்களின் 9வது நினைவேந்தல் மற்றும் புனித குர்ஆன் தமாம் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வினை வியூகம் TV ஊடாக உங்களது திரைகளுக்கு நேரலையாகக் கொண்டுவருகிறோம். அனைவரும் இணைந்துகொள்ளுங்கள்.
📅திகதி: 2026.07.25 (இன்று - சனிக்கிழமை)
நேரம்: இஷா தொழுகையைத் தொடர்ந்து
இடம்: இல. 115, காசிம் வீதி, கல்முனை – 10
நிகழ்வின் நேரலை ஒளிபரப்பைக் காண வியூகம் TV முகநூல் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
25/07/2026
கல்முனையின் வெளிச்சம் ஒய்ந்து ஒன்பது வருடங்கள்.
கல்முனையின் வெளிச்சம் ஒய்ந்து ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. கடந்த 2017 ஜூலை 24ம் திகதி அந்த நாளில் தான் கல்முனையின் மண்ணில் பிறந்து, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காகவே மறைந்த மாமனிதர் மர்ஹூம் A.R.M. மன்சூர் அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.
அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. கல்முனையின் கனவு. 1977-ல் கல்முனை மக்களின் நம்பிக்கையை சுமந்து பாராளுமன்றம் சென்றவர். வர்த்தக அமைச்சராக, குவைத் மற்றும் பஹ்ரைனுக்கான தூதுவராக நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஆனால் எந்த பதவியும் அவரது எளிமையை மாற்றவில்லை.
இந்த மாமனிதன் அரசியல் வாழ்வில்
"Gentleman Politician"
என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
புகழுக்காக அல்ல, பணத்திற்காக அல்ல, ஏழைகளின் வயிற்றுப் பசிக்காகவும், கல்முனையின் வளர்ச்சிக்காகவும் ஓடி...ஓடி...
உழைத்த உத்தமர். தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையின் குரலாக ஒலித்தவர். சட்டம் படித்தும் தன் வக்கீல் தொழிலை ஓரமாக்கி விட்டு, மக்கள் சேவையை தேர்ந்தெடுத்த மாமனிதர் மர்ஹூம் ARM.மன்சூர் என்றால் அது மிகையாகாது.
இன்று கல்முனை தொகுதியில் தலை நிமிந்து நிற்கும் அரச கட்டிடங்கள், நூலகங்கள், கல்முனை சந்தை தொகுதி, இலங்கை வங்கி தொகுதி, கல்முனை இ.போ.சபை சாலை, நீதிமன்ற கட்டிட தொகுதி, விவசாய பாலங்கள், மீனவ சமூகத்திற்கான மானிய படகுகள், இலஞர்களுக்கான வெளிநாட்டு புலமைபரிசில்கள், ஆயிரக்கணக்கான அரச நியமனங்கள் போன்றன அவர் விதைத்த சேவைகள் எனும் விதைகள். ஆனால் அவர் இல்லாத வெற்றிடத்தை எவரும், எந்தக் கட்சியும் இதுவரையில் நிரப்பவில்லை.
ஆனல் மாமனிதர் விட்ட இடத்தை தொடர இதுவரையில் யாரும் நினைக்கவும் இல்லை, அவரது மகன் நண்பன் றஹ்மத் மன்சூரை தவிர.
அவர் மறைந்தபோது அழுதது குடும்பம் மட்டுமல்ல.
கல்முனையே அழுதது. எல்லா இன மக்களும் கண்ணீர் விட்டார்கள். ஏனென்றால் அவர் "கல்முனையின் மகன்" ஆக இருந்தார்.
ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன.
ஆனால் அவரது நேர்மையும், மக்கள் பணியும், கல்முனை மீதான அவரது காதலும் இன்னும் நம் நெஞ்சில் உயிரோடு இருக்கிறது.
*"வெளிச்சம் ஒய்ந்தாலும், நினைவுகள் ஒளிர்கின்றன"*
அல்லாஹ் அவரது மண்ணறையை சுவர்க்கத்தின் பூந்தோட்டமாக ஆக்குவானாக.....
அவரது அன்பான குடும்பத்திற்கு ஆறுதல் அளிப்பானாக....
ஆமீன்...ஆமீன்....ஆமீன்....
அன்புடன்...
மாமனிதர் மர்ஹூம். ARM.மன்சூர் அவர்களின் அரசியல் பாசறையில் வளர்ந்த நான்.........
ஜுனைடீன் மான்குட்டி,
உயர்பீட உறுப்பினர்,
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்,
கல்முனை.
1448 முஹர்ரம் 08.
24/07/2026.
25/07/2026
*கல்முனையின் அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்தவர் ஏ.ஆர்.மன்சூர்*
*_எம்.எம்.ஏ.ஸமட்*
வீரகேசரி
25.07.2026
நன்றி- வீரகேசரி ஆசிரியர் பீடம்
(முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் ஒன்பதாவது ஆண்டு நினைவுநாள் இன்று ஜுலை 25ஆம் திகதி நினைவு கூறப்படுகிறது.
அதனையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், கப்பற்துறை, வர்த்தகம் மற்றும் வாணிப அமைச்சராகவும் தேசிய அரசியலில் பதவி வகித்து அரசியலிருந்து ஓய்வான காலம் முதல் மரணிக்கும் நேரம் வரை தான் பிறந்த மண்ணின் அபிவிருத்தி தொடர்பில் சதா சிந்தித்து வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் இவ்வுலகைவிட்டுப் பிரிந்து ஒன்பது ஆண்டுகள் கடந்தும் கல்முனை மண் இன்னும் அன்னாரை மறக்கவில்லை.
உலகம் தோற்றியது முதல் இன்று வரை கோடான கோடி மக்கள் வாழ்ந்து மறைந்து விட்டனர். அவ்வாறு மண்ணில் உதித்தவர்கள் எல்லோரும் மக்கள் மனங்களில் இடம்பிடிக்கவில்லை.
ஆனால், மறைந்த முன்னாள் அமைச்சர் மன்சூர் இன்றும் கல்முனை மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு அன்னார் மக்களுக்காகச் செய்த சேவையே காரணமெனக் கூறலாம்.
முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்ற அரசியல் பிரமுவர்களில் மறைந்த அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரும் ஒருவராவார்.
ஓர் அரசியல்வாதியின் வெற்றி அவர் வகித்த பதவிகளால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அவர் மக்களின் நினைவில் விட்டுச் சென்ற நம்பிக்கையினாலும் அளவிடப்படுகிறது.
அந்த வகையில் கல்முனை மக்களின் நலன்கள், அவர்களின் தேவைகள் குறித்து சிந்தித்து வாழ்ந்து மறைந்தவர்கள் வரிசையில் அன்னார் மகத்தானவர்.
1933ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ஆம் திகதி கல்முனை மண்ணில் பிறந்த அவர் தனது ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி என்பவற்றை பிரதேச, பிராந்திய பாடசாலைகளில் கற்ற பின் உயர்கல்வியை கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கற்றார்.
1955ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கற்கை நெறியை பூர்த்தி செய்து 1958ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கல்முனையின் கலங்கரை விளக்காகத் திகழ்ந்த அன்னாரின் மாமனார் மறைந்த கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பரின் தூண்டுதலின் பெயரில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
அத்துடன், அவர் 1979ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தில் மறைந்த எம்.எச்.எம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் வரவு பெரும் சவாலாக இருந்த காலகட்டத்தில் 1989ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்று வர்த்தக வாணிப்பதுறை அமைச்சராக 1994ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
1977ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரையான அன்னாரது 17 வருட கால அரசியல் வாழ்க்கையில் கல்முனைக்கு மாத்திரிமின்றி, கிழக்கு மாகாணம் உட்பட முழு இலங்கைக்கும் அவரது சேவை சென்றடைந்தது.
இருந்தும், அன்னார் தான் பிறந்த மண்ணின் மீதான பற்றின் காரணமாக கல்முனை உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களினதும், அபிவிருத்திக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும், போக்குவரத்துக்காகவும் மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுக்காகவும் தொடந்து முயன்ற அரசியல்வாதியாகவும் மக்கள் சேவகனாகவும் விளங்கினார்.
மட்டக்களப்பு வரையுள்ள ரயில் பாதையானது பொத்துவில் வரை விஸ்தரிக்கப்பட வேண்டும்.
கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட கரையோர மக்கள் பல வழிகளிலும் நன்மையடைய வேண்டும்.
அதற்காக மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரை ரயில் சேவைக்கான பாதை உருவாக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அனுமதிக்கிணங்க ஈரான் இஸ்லாமியக் குடியசிக்குச் சென்று இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
அதன் பயனாக, 1993ஆம் ஆண்டு ஈரான் அரசியின் பொறியியல் நிபுணர்குழு இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்துக்கு விரைந்து, ரயில் போக்குவரத்துப் பாதையை மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை விஸ்தரிப்புச் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான திட்ட வரைவுகளையும் பூர்த்தி செய்தனர்.
விஸ்தரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் காரணமாக இத்திட்டம் முன்நோக்கி நகர்த்தப்படாது கைவிடப்பட்டதனால் அன்னார் பெரும் கவலை கொண்டார்.
இன்று கல்முனையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்ற அரச கட்டடங்களில் 90 வீதமானவை அன்னாரின் அரசியல் அதிகார காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டவைகளாகும்.
இன, மத, பிரதேச வேறுபாடின்றி கல்முனை வாழ் அனைத்து இன மக்களும் பயனடையத்தக்கதான அபிவிருத்திகளை அன்னார் இக்கல்முனை மண்ணுக்குச் செய்திருக்கிறார்.
அவ்வாறு கல்முனையை அலங்கரிக்கச் செய்த அன்னாரது பெயரை அன்னாரினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனைப் பொது நூலகத்திற்கு சூட்டியபோதிலும், அன்னார் உயிரோடு இருக்கும்போதே அன்னராது பெயர்பலகை சமூக விரோதிகளினால் உடைத்து நொருக்கப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.
இருப்பினும், அபிவிருத்தியினூடாக பிரதேச சமூக ஒருமைப்பாட்டைக் கட்டிக்காத்து வாழ்ந்த அன்னாரது ஜனாஸா நல்லடக்கத்தில் அனைத்து இன மக்களும் கலந்து கொண்ட நினைவுகள், அன்னார் பிரதேசத்தின் அனைத்து இன மக்களையும் அனுசரித்து வாழ்ந்தவர் என்பதற்கு சான்றாகும்.
கல்முனைப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காக அவர் புரிந்த பங்களிப்பு அளப்பெரியதென்றே கூற வேண்டும்.
பிரதேச பாடசாலைகளில் பல்வேறு கட்டடங்களை தனது அரசியல் பதவிகளினூடாக நிர்மாணித்துக் கொடுத்தது மாத்திரமின்றி, பாடசாலைகள் தரமுயர்த்தப்படுவதற்கும் கால்கோலாக இருந்தார்.
அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமின்றி, கிழக்கு மாகாணத்திலுள்ள மாணவர்கள் இப்பிராந்திய ஆசிரியர்களினாலேயே கற்பிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் அட்டாளைச்சேனையில் ஒரு தேசிய கல்விக் கல்லூரி உருவாக வேண்டும் என்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து, அதற்கான அமைச்சரவைப் பத்திரங்களையும் சமர்பித்து ஒரு தேசிய கல்விக் கல்லூரி அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் உருவாகுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார்.
அத்துடன், அன்னார் 2003ஆம் ஆண்டு காலப்பகுதியில் குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக பதவி வகித்த வேளை, அந்நாட்டின் நிதி உதவிகளைப் பெற்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கட்டட நிர்மாணப்பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதற்கு தூண்டுகோலாக இருந்தார்.
இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு அன்னார் புரிந்த சேவைகளை கௌரவிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகம் அன்னாருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி வைத்தது.
இப்பட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார் என்பது சுட்டிக்காட்டரத்தக்கது.
அன்னார் அரசியல் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இப்பிரதேசத்தில் அபிவிருத்திகள் இடம்பெற வேணடும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டவர்.
பிரதேச அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களால் இதுவரை அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு செய்யப்படாதுள்ள மாவடி பள்ளி முதல் நட்பிட்டிமுனை வரை போக்குவரத்து நெரிசல் அற்ற விவசாயிகள் மட்டும் பிரதேச மக்களின் பயணத்திற்காக கல்முனை குளக்கட்டு வீதியை விஷ்தரிக்க அதிகாரமில்லாதபோதிலும், அவ்வீதியை அபிவிருத்தி செய்ய முயற்சித்தார்.
இவ்வீதியை புனரமைப்பதற்கான நிதியைத் தன்னால் பெற்றுத் தர முடியும் என்றும் அதற்கான திட்ட வரைவுகளை அரசியல் அதிகாரமுள்ளவர்களிடமிருந்து பெற்றுத்தருமாறு இக்கட்டுரையாளரிடம் கூறியதற்கிணங்க இக்கட்டுரையாளரினால் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கபபட்ட போதிலும், அத்திட்ட வரைவுகளை பெற முடியாமல் போனமை துரஷ்டவசமமே.
அன்னார் மறைந்து ஒன்பது வருடங்கள் கடந்தும் அரசியல் அதிகாரங்கள் இவ்வீதியை இன்றுவரை புனரமைக்கவில்லை.
கல்முனை மண்ணையும் மக்களை நேசித்து வாழ்ந்த,
கல்முனையின் அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்த மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரை வருடங்கள் பல கடந்தாலும் கல்முனை மண் மறக்காது. அன்னாரின் சேவைகள் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும்.
வல்ல இறைவன் அன்னாரின் மக்கள் சேவைகளை பொருந்தி,
பாவங்கள் அனைத்தையும் மன்னித்து,
நற் கருமங்கள் அனைத்தையும் ஏற்று ,
நாளை மறுமையில் உயர்ந்த சுவனத்தை வழங்க பிரார்த்திப்போம்!!
24/07/2026
"நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்" என்று அரசியலில் வரலாறு படைத்து எம்மை விட்டு மறைந்த ஆளுமை மிக்க அரசியல்வாதி கல்முனையின் அபிவிருத்தி நாயகன் மறைந்து நாளையுடன் (2026.07.25)
9 வருடம் பூர்த்தியாகுவதை முன்னிட்டு இன்று (2026.07.24) தினகரன் பத்திரிகையில் வெளிவந்த விஷேட கட்டுரை.
- தேசகீர்த்தி அப்துல் கபூர் -
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Eastern Province
Melbourne, VIC
32300